×

அழகான தாலாட்டுப் பாடுங்கள்

எத்தனையோ சடங்குகள் அர்த்தம் புரியவில்லை என்று நாம் பின்பற்றுவது இல்லை. அதுகூடப் பரவாயில்லை. இந்த சடங்குகள் எல்லாம் பின்பற்றுவது பிற்போக்குத்தனம் என்று நினைத்தும், பலர் பின்பற்றாமல் இருக்கிறார்கள். நமக்கு இப்போதைக்கு விளங்காத ஒரு விஷயம், அல்லது நமக்கு நம்பிக்கை இல்லாத ஒரு விஷயம், தவறான விஷயம் என்று நாம் முடிவுக்கு வந்து விடக்கூடாது.

ஏதோ ஒரு நன்மையைக் கருதி, மன ஆறுதலைக் கருதி, தெளிவான உண்மைகளை உணர்த்தக் கருதி, ஆரோக்கியத்தைக் கருதி, இந்த மாதிரியான சடங்குகளை, தங்களுடைய அனுபவத்தின் காரணமாக, நம்முடைய முன்னோர்கள் வகுத்துக் கொடுத்திருக்கிறார்கள். உதாரணமாக, ஒரு குழந்தையை பிறந்த பன்னிரண்டாவது நாள், பிரசவ அறையில் இருந்து, வெளியே எடுத்து வருவார்கள். இது ஒரு சடங்கு. இந்த சடங்குக்கு`நிஷ் க்ரமணம்’ என்று பெயர். அதைப் போலவே, மூன்றாவது மாதத்தில் அந்த குழந்தையை வெளியிலே எடுத்துச் சென்று, காலை சூரியனைக் காட்டுவார்கள்.

அன்று ஆரம்பித்து வாழ்நாளெல்லாம் காலையில் சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும். அது ஒரு இயற்கை வழிபாடு. சூரியனையே தெய்வமாக நினைக்கக் கூடிய வழிபாடு. சூரிய ஒளி இல்லையேல் இந்த உயிர்கள் இல்லை. அது மட்டும் இல்லை. சூரியக் கதிர்கள் நம்முடைய உடம்பில்படுவதால் பலவிதமான மருத்துவப் பயன்கள் இருக்கின்றன. இன்றைக்கு பாதி பேருக்கு மேல் `வைட்டமின்-D’ குறைபாடு இருக்கிறது. எலும்புகள் அதிக தேய்மானம் அடைந்துவிடுகின்றன.

பலவிதமான இடர்பாடுகள் இந்த D-12 குறைபாட்டினால் இடர்கள் ஏற்பட்டு அதற்குமாத்திரைகளை எடுத்துக் கொள்ளுகின்றார்கள். இந்தக் காலத்தில்தான் இவைகள் எல்லாம் தொல்லை தருகின்றன. அந்தக் காலத்தில் பெரும்பாலும் மேல் சட்டை இல்லாமல், சூரிய வெளிச்சத்தில் வெளியே உலாவுவதால், நிறம் கருத்துப் போனாலும், வைட்டமின் – D குறைபாட்டினால் பாதிக்கப் படவில்லை.

சாகும் வரை ஓரளவு ஆரோக்கியமாகவே நடமாடிக் கொண்டிருந்தார்கள். குழந்தைக்கு இந்த ஆரோக்கியம் வேண்டும். சூரியன்தான் அனைத்தையும் தூய்மைப்படுத்துவது. ஆத்மகாரகன். அவனைப் பார்க்க வேண்டும். சூரிய ஒளி குழந்தையின் உடலில் பட வேண்டும் என்பதற்காக இதை ஒரு சடங்காக வைத்தார்கள். நான்காவது மாதத்தில் சந்திரனைக் காட்டுவது ஒரு சடங்கு. ‘‘நிலா நிலா ஓடி வா” என்று நிலாச்சோறு என்று ஒரு வழக்கம் இருந்தது. சந்திர ஒளி மிகமிக ஆரோக்கியமானது. ஒளஷத (மருந்து) ஒளி என்று சொல்லுவார்கள்.

அதனால்தான் பயிர்கள் செழிப்பாக வளர்கின்றன. அமிர்த கதிர்கள் என்று சந்திரனுடைய கதிர்களைச் சொல்லுவார்கள். அது உயிர் வளர்ச்சிக்கு உதவுகிறது. நல்ல எண்ணங்களைத் தருகிறது. தெளிவான சிந்தனையைத் தருகிறது. நம்முடைய தமிழ் மரபில், பிள்ளைத் தமிழில் அம்புலி காட்டும் பருவம் என்று ஒரு பருவமே உண்டு. குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டு, நிலாவைக் காட்டுவது.

அகநானூறில் ஒரு காட்சி. ஒரு தலைவன் அந்த நாட்டு அரசனோடு போருக்குப் போகிறான். போர் முடிந்து திரும்பி வரும் போது குடும்ப சிந்தனை வருகிறது. அது மாலை நேரம். வானத்தில் பிறை நிலா. ஊரில் இந்நேரம் மனைவி குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டு நிலாவைக் காட்டிப் பால் கொடுத்துக் கொண்டு இருப்பாள் என்கிற சிந்தனை படமாக விரிகிறது. இதோ பாடல்;

முகிழ் நிலாத் திகழ்தரும் மூவாத் திங்கள்!
பொன்னுடைத் தாலி என்மகன் ஒற்றி
வருகுவையாயின் தருகுவன் பால் என
விலங்கு அமர்க்கண்ணள் விரல் விளி பயிற்றி – (அகநானூறு 54: 17 – 20)
குழந்தைக்கு நிலா காட்டும் வழக்கம் பழந்தமிழ் மரபு.

பெரியாழ்வார் பாடிய பிள்ளைத்தமிழில் கண்ணனை இடுப்பில் வைத்துக் கொண்டு யசோதை நிலவைக் காட்டி அழைப்பதாக அருமையான பாடல்கள் (பாசுரங்கள்) உண்டு. அதில் ஒரு பாடல் இது;

சுற்றும் ஒளிவட்டம் சூழ்ந்து
சோதி பரந்தெங்கும்
எத்தனை செய்யிலும் என் மகன்
முகம் நேர் ஒவ்வாய்
வித்தகன் வேங்கடவாணன்
உன்னை விளிக்கின்ற
கைத்தலம் நோவாமே அம்புலீ
கடிதோடி வா

காலையில் எழுந்து சூரிய நமஸ்காரமும், பௌர்ணமியின் போது சந்திர தரிசனமும் செய்ய வேண்டும். அதற்கென்று சித்ரா பௌர்ணமி என்கின்ற ஒரு விழாவும் நம்முடைய பழந்தமிழ் மரபில் உண்டு என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. மூன்றாம் பிறையைப் பார்ப்பது, ஆயிரம் சந்திர தரிசனம் (சகஸ்ர சந்திர தர்சி) செய்தவர்களை சதாபிஷேகம் செய்து ஆசீர்வாதம் பெறுவது என்றெல்லாம் நம்முடைய மரபுகள் இருக்கின்றன.

அதில் முதல் தரிசனம் குழந்தைக்கு சூரிய சந்திரர்களைக் காட்டுவதில் ஆரம்பிக்கின்றது இந்த சந்திரனையும் சூரியனும் நம்பித்தான் நீயும் இருக்கிறாய் மற்ற உயிர்களும் இருக்கிறது என்பதை உணர்த்துகின்ற விஷயங்களை எல்லாம் காலப் போக்கில் மறந்துவிட்டோம். அதைப் போலவே குழந்தைக்கு தொட்டிலிட்டு தாலாட்டு பாடும் மரபும் கொஞ்சம் கொஞ்சமாகப் போய்விட்டது. தாலாட்டு என்பது ஏதோ தூங்க வைப்பதற்கான ஒரு இசை என்று மட்டும் நினைத்து விடக்கூடாது.
பெரியாழ்வார் தனது பிள்ளைத்தமிழில் அழகான தாலாட்டு பாடியிருக்கிறார். இதைப் பாடுவதன் மூலம் பக்தியும் தமிழும் வளரும்.

மாணிக்கம் கட்டி வயிரம் இடை கட்டி
ஆணிப் பொன்னால் செய்த வண்ணச் சிறுத்தொட்டில்
பேணி உனக்குப் பிரமன் விடுதந்தான்
மாணிக் குறளனே தாலேலோ
வையம் அளந்தானே தாலேலோ
இதைப் பாடுபவர்களுக்கு துன்பம் இல்லை என்றும் உறுதி தருகின்றார்.
வஞ்சனையால் வந்த பேய்ச்சி முலை உண்ட
அஞ்சன வண்ணனை ஆய்ச்சி தாலாட்டிய
செஞ்சொல் மறையவர் சேர் புதுவைப் பட்டன் சொல்
எஞ்சாமை வல்லவர்க்கு இல்லை இடர்தானே

குழந்தை எப்படி வளர வேண்டும் என்ற செய்தியை மெல்லக் குழந்தையின் மூளைக்குக் கடத்துவது தாலாட்டு. குழந்தைக்கு தெய்வீகக் கதைகள், நல்ல பல அறிவுரைகள் என்ற பல குறிப்புகள், தாலாட்டுப் பாடல் களில் அடங்கி உள்ளன. தங்களுடைய மனக் குறையும் சொல்லி, ‘‘என்னுடைய மனக்குறையை எல்லாம் நீக்க வேண்டும்’’ என்று சிறுவயதிலேயே தாலாட்டுப் பாடலின் மூலமாக குழந்தையின் புத்திக்குக் கடத்துவதும் உண்டு.

“நீ வளர்ந்து மரமாகி
நிழல் தரும் காலம் வரை
தாய் மனதை பார்த்திருப்பேன்
தங்க மகனே”

என்பது கண்ணதாசன் ஒரு திரைப்படத்துக்கு எழுதிய தாலாட்டு. வாய்மையோடு நடந்து கொள்ள வேண்டும். பொய் பேசக்கூடாது. பெரியவர்களை மதிக்க வேண்டும் போன்ற பல செய்திகள் இந்த தாலாட்டுப் பாடல்களிலே புதைந்து இருக்கின்றன. குறைந்த பட்சம், நல்ல தமிழ் திரைப்பாடல்களைக் கூட, தாலாட்டுப் பாடல்களாகப் பாடலாம். பட்டுக்கோட்டையின் இந்தத் தாலாட்டில் எப்படி தமிழ் கொஞ்சுகிறது பாருங்கள்.

சின்னஞ்சிறு கண் மலர்
செம்பவள வாய் மலர்
சிந்திடும் மலரே ஆராரோ
வண்ண தமிழ் சோலையே
மாணிக்க மாலையே
ஆரிரோ அன்பே ஆராரோ ஆரிரோ ஆராரோ

என்ன அழகான செய்தி குழந்தைக்கு சொல்லப்படுகிறது பாருங்கள்.

ஏழை நம் நிலையை எண்ணி நொந்தாயோ
எதிர் கால வாழ்வில் கவனம் கொண்டாயோ
நாளை உலகம் நல்லோரின் கையில்
நாமும் அதிலே உயர்வோம் உண்மையில்
மாடி மனை வேண்டாம்
கோடி செல்வம் வேண்டாம்
வளரும் பிறையே நீ போதும்
வண்ணத் தமிழ் சோலையே
மாணிக்க மாலையே
ஆரிரோ அன்பே ஆராரோ ஆரிரோ ஆராரோ

தாலாட்டுப் பாடலைக் கேட்கும் பொழுது குழந்தையினுடைய மொழி அறிவு வளர்கிறது. இவைகள் எல்லாம் மறைமுகமான பலன்கள். எனவே வெறும் சடங்குகள் என்பதும், பணம் காசு செலவு செய்கின்ற தேவையில்லாத விழா என்கிற மனப்பான்மையும் இப்பொழுது அதிகமாகிவிட்டது. நாம் நன்கு ஊன்றி கவனித்தால், அதிலே எத்தனை நன்மைகள் இருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

தொகுப்பு: தேஜஸ்வி

The post அழகான தாலாட்டுப் பாடுங்கள் appeared first on Dinakaran.

Tags :
× RELATED வெற்றிக்கு வித்திடும் குலதெய்வ வழிபாடு!